Sunday, June 24, 2012

பேண்ட்டு

"டேய் இந்த ஹாலிடேல பேண்ட்டு வாங்கிபுடணும்டா", கதிரு சொல்ல, சுகுமாரு அதை ஆமோதிப்பது போல தலையாட்டினான். கதிரு, அவிழ்ந்து விழும், தன்னோட அரைடவுசரை சரி செஞ்சுக்கிட்டே, தாவக்கட்டையிலே கை வெச்சுக்கிட்டு யோசிச்சான். சுகுமாருவுக்கும், ஒரே யோசனைதான். இந்த பேண்ட்டு இல்லாம, க்ளாஸ்லே அடி வாங்க முடியலே. இந்த அஞ்சாப்பு வாத்திக்கெல்லாம், பசங்களோட கால பாத்தாலெ எப்படியிருக்குமோ. எப்ப அடிக்கறதுன்னாலும், தொடைக்கு கீழேயே அடிச்சு அடிச்சு ரணகளம் ஆக்கி வெச்சுடுவாங்க. இந்த பொண்டுங்க வேற, களுக் களுக்னு சிரிச்சு தொலைவாளுக. கதிரும், சுகுமாரும் அதுக்குன்னே பேண்ட்டு வாங்கற‌துக்கு ப்ளான் பண்ணினான்ங்க. அதை தவிற பேண்ட்டு வாங்கிறதுக்கு, இன்னும் நெறைய காரணமும் இருந்துது. பக்கத்து வீட்டு முள் வேலி ஏறி குதிச்சு மாங்கா பறிக்கும் போது முள்ளு தொடைலே குத்தாம இருக்கிறதுக்கும், சைக்கிள் குரங்கு பெடல் ஓட்டையிலே டவுசரால மானம் போகாம இருக்கிறதுக்கும், இந்த பேண்ட்டு ரொம்ப அவசியமா பட்டுது. ஆனா, அதை எப்படி வாங்கிறதுன்னு தான் தெரியலே. அப்பா, பத்தாம்ப்பு போகும் போதுதான் வாங்கிதருவேன்னு சொல்லிட்டாரு. வருஷா வருஷம் கேட்டாலும் இதே பதிலத்தான் சொன்னாரு. அதான், இவனுங்க ரெண்டு பேரும், கொளத்தாங்கரைலே உக்காந்து யோசிச்சானுங்க. சுகுமாருதான் சொன்னான் "டேய், இப்படி செய்ஞ்சா எப்படி, மண்டையன்ட்டே கேப்போம்". மண்டையன் பிஞ்சிலேயே பழுத்தது. இவனுங்களை விட ரெண்டு வயசு பெரியவன். அவனோட நெஜ பேரு என்னன்னு யாருக்குமே தெரியாது. மண்டை குருவிக்கூடு மாதிரி இருக்கும். யாருக்கு தெரியும். அதிலே ரெண்டு குருவி இருந்தாக் கூட இருக்கலாம். அந்தளவுக்கு சிக்கு பிடிச்சு இருக்கும். அந்த ஊரிலேயே, நாலாப்புலேயே பேண்ட்டு போட்டவன் அவன் தான். அதான் சுகுமாரு அவன்கிட்டே கேக்கலாம்னு சொன்னான். கதிருக்கும் அதுதான் சரின்னு பட்டுச்சு. அவன் என்ன செஞ்சு பேண்ட்டு வாங்கினான்னு தெரிஞ்சிதுன்னா, அதேயே யூஸ் பண்ணி நம்ப அப்பாக்கிட்டே வாங்கிடலாம்னு அவன் யோசிச்சான். ரெண்டு பேரும் மண்டையன் வீட்டுக்கு ஓடினானுங்க. மண்டையன் அப்போதான் எங்கேயோ கிளம்பிட்டிருந்தான். "மண்டையா, மண்டையா," சுகுமாரு தான் கூப்பிட்டான். மண்டையன் திரும்பிப்பார்த்தான். "டேய், இந்தாடா கமர்கட்டு நில்லுடா". அவன்கிட்டே லஞ்சம் குடுத்தாதான் வேலை நடக்கும். மண்டையன் கேட்டான் "என்னாடா வேணும் ஒங்களுக்கு"? "டேய் நீ எப்படிடா நாலாப்புலேயே பேண்ட்டு வாங்கினே, உங்கப்பாட்டே என்னாடா சொல்லி வாங்கினே? எங்களுக்கும் கொஞ்சம் சொல்டா". மண்டையன் யோசிச்சான். "நான் சொல்ல மாட்டேன்", நான் சொல்ல மாட்டேன்னு" சீன் போட்டான். அஞ்சு கமர்கட்டும், ஆறு சாக்லேட்டும் உள்ளே போன பொறவுதான் வாயையே தொறந்தான். டேய் யார்ட்டேயும் சொல்ல கூடாது தெரியுதான்னு கேட்டு ரெண்டு பேர்ட்டயும் சத்தியம் வாங்கிட்டுத்தான் ஆரம்பிச்சான். "அது ஒண்ணுமில்லேடா, ஒரு நா ஸ்கூல் உட்டு வரும்போ, எங்கப்பா மஹாலட்சுமி அக்கா ஊட்டுக்கு அரிசி வாங்கி போடறத பார்த்தேன். நான் பார்த்தத அவரும் பாத்திட்டாரு. ஒடனே என்னை கூப்ட்டு இத அம்மாட்டெ சொல்லாத, ஒனக்கு என்னா வேணா வாங்கித்தரேன்னு சொன்னாரு. நா பேண்ட்டு வாங்கிகிட்டேன்". மஹாலட்சுமி அக்கா ஊருக்கு ஒதுக்குப்புறமா தங்கியிருக்கு. அக்காவோட புருஷன் மிலிட்டரிலே இருக்கான்னு சொல்வாங்க. கதிருக்கு ஒண்ணும் புரியலே. "நானுந்தான்டா அக்காவுக்கு அரிசி வாங்கி கொடுத்திருக்கேன், அதனாலே பேண்ட்டு கெடைக்குமா என்ன?". மண்டையன் ரெண்டு பேரையும் என்னமோ புழுவப்பாக்கிறா மாதிரி பார்த்தான். நான் சொல்றத சொல்லிபுட்டேன், இனிமே ஒங்க இஷ்டம்னு சொல்லிட்டு போய்ட்டான். சுகுமாருதான் சொன்னான், "டேய், நீ போய் ஒங்கப்பா அரிசி வாங்க போவும்போது போய் பாரு, நானும் போயி பாக்கிறேன்னு சொல்லிட்டு போய்ட்டான். கதிரு வீட்டுக்கு போனான். அவன் அப்பா எங்கேயோ கெளம்பினாரு. "அப்பா எங்கேப்பா போற", "அரிசி வாங்க போறேன்டா". கதிருக்கு தலை கால் புரியலெ. "அப்பா, மஹாலட்சுமி அக்கா வீட்டுக்குத்தானே அரிசி குடுக்கப்போறேன்னு" கேட்டதுதான், அவன் அம்மா உள்ளேர்ந்து ஓடி வந்தா, "என்னாயா சொல்றான் பையன்னு கேட்டு அவன் அப்பனை ரெண்டு சாத்து சாத்துனா. கதிரோட அப்பன் அவன பாத்துகிட்டே தன்னோட பெல்ட்டை உருவினான். கதிருக்கு அந்த வருஷமும் பேண்ட்டு கெடைக்காதுன்னு புரிஞ்சு போச்சு.